துணிவு திரைப்பட கொண்டாட்டத்தின்போது, அஜித்தின் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர்கள் விஜயும், அஜித்தும், தனது ரசிகர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், நல்ல வழியில் செல்ல அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும், கூறியிருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, ரசிகரின் இறுதி நிகழ்வில் கூட அஜித் கலந்துக் கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அவரது ரசிகர்களே சில காரணங்களை கூறி வந்தனர். இவ்வாறு இருக்க, அஜித் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் சரத்குமார், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன் என்றும் அவர்களுக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ரசிகருக்கு இறுதி மரியாதை செலுத்த அஜித் கலந்துக் கொள்ளாதது குறித்து பேசினார்.
” ரசிகரின் மரணம் குறித்து அஜித்திற்கு தெரிந்திருக்கும், ஆனால் தேவையற்ற குழப்பங்களை களையவே, அஜித் வராமல் இருந்திருக்கலாம்” என்று கூறினார். மேலும், உயிரிழந்த மாணவர் அமைச்சர் உதயநிதியின் தொகுதியை சேர்ந்தவர் என்பதால், அவர் நிச்சயம் ஏதேனும் உதவி செய்வார் என்றும் சரத்குமார் கூறியிருந்தார்.