நடிகர் சித்தார்த் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘சித்தா’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டனர்.
“காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.