தமிழக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென பிரசாரத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
“உடல்நிலை காரணமாக பிரசாரம் செய்ய இயலாது” என தெரிவித்து ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை மிகவும் பாதிப்படைய செய்தது. இதனை தொடர்ந்து பல்வேறு சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை.
இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியது. இருந்த போதும் அதனை புறக்கணித்து பாஜகவின் காரியகர்த்தாவாக தொடர்ந்து பிரசாரம் செய்தேன். மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்ததால் வலி மற்றும் வேதனை அதிகரித்துள்ளது.
எனவே கனத்த இதயத்துடன், தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதற்கு ஒரு இடைநிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற எண்ணம் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதையும் நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.