சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேசிய சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டார்.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா – எல்1 விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது. இது விண்ணில் பாய தயாராக உள்ளது. சூழ்நிலை சாதமாக அமைந்தால் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்தார் சோம்நாத்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்- 1இல் தொடங்கிய நிலவுப் பயணம் சந்திரயான்- 2 என தொடா்ந்தது. சந்திரயான் 2 விண்கலம் (ஆா்பிட்டா்) இன்றைக்கும் நன்றாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சந்திரயான்- 1, சந்திரயான்- 2 விண்கலங்களைக் கட்டமைக்க பங்காற்றியக் குழுவினரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். சந்திரயான்-3 மூலம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பா்) விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்தார்.