தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் அண்ணாமலை குறித்து பேசியுள்ளார் : அப்போது ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. சொந்த கட்சியினரே அண்ணாமலை மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர்.
இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியினுடைய தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை. ஏதாவது ஒரு போலீஸ் மாமூல் வாங்கி கொண்டு இருந்திருப்பார். அதிமுக கூட்டணி பிடிக்கவில்லையென்றால் வெளியே போகலாம் என அவர் பேசியுள்ளார்.