சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், 19 வயதான இளம்பெண், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த இந்த மாணவி, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பல்கலைக்கழக வளாகத்தில், காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 2 பேர், மாணவியை ஆபாசமாக படம் பிடித்துள்ளனர்.
மேலும், காதலனை அடித்துவிட்டு, அந்த வீடியோவை வைத்து மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, மாணவியும், அவரது காதலனும், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரன் என்ற நபரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாலையோரமாக, பிரியாணி கடை நடத்தி வந்தவர் என்பதும், இதற்கு முன்னர் பல வழக்குகளில் சிக்கியிருப்பவர் என்பதும் தெரியவந்தது. மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு மாணவிகளிடம், ஞானசேகரம் அத்துமீறியிருப்பதும், விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.