விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுகவின் புகழேந்தி MLA-ஆக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று, காலமானார்.
இதையடுத்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டது.
இதனால், திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், இடைத்தேர்தலுக்கான பணியில் ஆயத்தமாகின. ஆனால், அதிமுக தரப்பில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்று கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலை, புறக்கணிப்பதாக, அதிமுக முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து பேசிய கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார், “இடைத்தேர்தல் நியாயமான ரீதியில், ஜனநாயக வழியில் நடக்காது. திமுக ஆட்சி அராஜக ஆட்சியாக இருக்கிறது. இடைத்தேர்தலில் அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டு போலி வெற்றியை திமுக பெறும்” என்று தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.