சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்த விரக்தியில் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. திமுகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறியதாவது : திமுக தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஒரு பெற்றோரிடமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறினார். அதற்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆளுநரை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ மூச்சு விட கூட துணிச்சல் இல்லாதவர்கள்தான் அதிமுகவினர்” என உதயநிதி கூறினார்.