சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருப்பவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கோகுல கிருஷ்ணனும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண், கோகுலகிருஷ்ணனிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் கோட்டைகுப்பம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடத்தப்பட்ட இளம்பெண்ணுடன், கோகுலகிருஷ்ணன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், இருவரையும் மீட்டு சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இதையடுத்து கோகுல் கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.