விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய வகை ஆப்பிரிக்க குரங்கு சென்னையில் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய வகை, 2 மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை,சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வன குற்ற பிரிவினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து, கடத்தல் பயணியை கைது செய்ததோடு,அந்தப் பயணியின் செலவில்,கடத்தல் குரங்கு குட்டிகளை மீண்டும்,தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்க்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம்,சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக போய் விட்டு திரும்பி வந்தார்.

அவர் இரண்டு பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை.

இதை அடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனால் அவர் வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் கூடைகளில், அறிய வகை குரங்கு குட்டிகள் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

மேற்கு ஆப்பிரிக்க வனப்பகுதியில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கக் கூடிய சூட்டி மங்காவே மற்றும் காலர்டு மங்காவே என்ற 2 ஆப்பிரிக்கா வகை அரிய குரங்கு குட்டிகள், அவர் வைத்திருந்த கூடைகளுக்குள் இருந்தன. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வெளியில் விடாமல் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆப்பிரிக்க வகை குரங்குகள் மிகவும் ஆபத்தானவை. இவைகள் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நிறைந்த வகைகள்.

இந்த வகை குரங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு, அனுமதியே கிடையாது. மேலும் இந்த பயணி முறையான எந்த அனுமதியும் இல்லாமல், இந்த 2 குரங்குகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதை அடுத்து இந்த குரங்குகளை கடத்தி வந்த அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகளும்,ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து கைது செய்தனர். அதோடு இந்த இரண்டு குரங்குகளையும், மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கும் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகளை இந்த குரங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த கடத்தல் பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த அரிய வகை குரங்குகளை எதற்காக இவர் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? இந்தக் குரங்குகளை யார் கடத்தி வர சொன்னார்கள்? என்று தொடர்ந்து சுங்கத்துறை மற்றும் ஒன்றிய வன குற்றப்பிரிவு அதிகாரிகள் கடத்தல் அசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News