பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிஷான் மஷ்டோர் மோர்ச்சா ( KMM ) மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகள், பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. பஞ்சாப்புக்கும், ஹரியானாவுக்கும் இடையே உள்ள ஷம்பு மற்றும் கனாரி எல்லைப்பகுதியில், இந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நொய்டாவில் உள்ள மகா மயா மேம்பாலத்தில் இருந்து டெல்லியை நோக்கி, இன்று பேரணி நடத்த உள்ளனர்.
இந்த மாபெரும் பேரணி நடக்க இருப்பதால், அப்பகுதியில் வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள காவல்துறையினர், வேறு வழியில் செல்வதற்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, அப்பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை என்னென்ன?
1. அதிகபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
2. விவசாய கடன்கள் தள்ளுபடி
3. விவசாயிகளுக்கும், விவசாய கூலிகளுக்கும் பென்ஷன்
4. மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது
5. தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
6. 2021-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.
7. 2013-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
8. 2020-ல் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இந்த 8 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தான், கடந்த 293 நாட்களாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.