இந்த உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படும்போது, அதை பற்றிய அச்சங்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுவது இயல்பு தான். இந்த அச்சங்களை மீறி தான், வெற்றிகரமாக உலகம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடெக்கோ க்ரூப் என்ற பணியாளர்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்று, புதிய சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. 9 நாடுகளில் உள்ள 18 நிறுவனங்களை உள்ளடக்கி எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், தற்போது வெளியாகியுள்ளது.
அந்த சர்வேயில், ஏ.ஐ துறையில் புதிய அலை ஒன்று வந்துக் கொண்டிருக்கிறது என்றும், இதன்மூலம், 41 சதவீத பணியாளர்கள், 5 வருடத்திற்குள் தங்களது வேலையை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
கிரியேட்டிவ் பணிகளான புகைப்படங்கள் எடுத்தல், வீடியோ எடுத்தல் போன்ற பணிகளை செய்யும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் தான், இந்த செய்தி வந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த சிலர், செக்குமாடு போல் ஒரே மாதிரியான வேலைகளை திரும்ப திரும்ப செய்யும் பணிகளுக்கு மாற்றாக தான், இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படும் என்று கூறுகின்றனர்.
ஆனால், ஒருசிலர், இது நம்மிடம் உள்ள அனைத்து பணிகளையும் பறித்துக் கொள்ளும் என்று அச்சம் கொள்கின்றனர். இதுகுறித்து பேசிய அடெக்கோ நிறுவனத்தின் CEO டெனிஸ் மேச்சுவல், பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
அதில், “அனைத்து வகையான பணிகளும், ஏதே ஒரு வகையில், ஏ.ஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏ.ஐ என்பது வேலைகளை பறிக்கக் கூடிய கொலைக்காரனாக இருக்கும். இதேபோல், பல புதிய பணிகளை உருவாக்கவும் செய்யும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ பல்வேறு புதிய பணிகள் டிஜிட்டல் யுகத்தில் பறிபோகும் என்ற பயம், 10 வருடங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தான், பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஐ தொழில்நுட்பத்தால், வேலைகள் பறிக்கப்படுவதும், உருவாக்கப்படுவதும், Balance-ஆகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.