பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக 52-ம் ஆண்டுதொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது:
தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். ஒடுக்கப்பட்ட, அடித்தள மக்களுக்கு இல்லம் தேடிச் சென்று திட்டங்களைக் கொடுத்தது அதிமுக அரசு. ஆனால், திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர்.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், கல்விக் கடனை ரத்து செய்வதாகவும் ஸ்டாலினும், உதயநிதியும் வாக்குறுதி கொடுத்தனர். இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திவிட்டனர். பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. பழுதடைந்த பேருந்துகளை இயக்கிக் கொண்டு இருக்கின்றனர். டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவத் துறையும், சட்டம்-ஒழுங்கும் சீரழிந்துவிட்டன.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை தருவோம் என்றனர். ஆனால், திமுகவை சேர்ந்தவர்களாகப் பார்த்து, உரிமையைத் தொகையை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை திசை திருப்ப சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையினர் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே எங்கள் தேர்தல் முழக்கம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.