கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.