Connect with us

Raj News Tamil

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக உள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி!

தமிழகம்

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக உள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி!

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக உள்ளது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கூட்டணி குறித்து ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். சேலம் மாநகர் பூத் கமிட்டி நிகழ்ச்சியில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களுடைய உணர்வுகளை தீர்மானமாக நிறைவேற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்.

அதிமுக தலைமையில் இங்கு கூட்டணி அமையும். எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை பொருத்திருந்து பாருங்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்’ என்றார்.

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியது குறித்து பதிலளித்த இபிஎஸ், ‘அது அவர்களுடைய கருத்து. அதற்கு நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. எங்கள் கட்சி பற்றி தான் நாங்கள் பேச முடியும்’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம்.

தேர்தலின்போது, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்லி வருகின்றனர்.

தென்னை விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். திமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா?

முரண்பட்ட கட்சிகள் ‘இந்தியா கூட்டணி’ என்ற பெயரில் இணைந்துள்ளன. அந்த கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை.

திமுக அரசுக்கு டெல்டா விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்றுத் தந்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் இந்த கோரிக்கையை முதல்வர் முன்வைத்திருக்க வேண்டும். திமுக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. காவிரி பிரச்னைக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம்.

அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அதுபோல அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் தரவில்லை ‘ என்று பேசினார்.

More in தமிழகம்

To Top