அதிமுக 6 அணிகளாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
“விழுப்புரம் திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்குள்ள இரண்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார். தமிழகத்தில் 40 மட்டுமின்றி, இந்தியா முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் இந்தியா கூட்டணி உள்ளது. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் ஸ்டாலின் என்பதை யாரும் மறக்க மாட்டார்கள்.
கடந்த முறை ஒரு தொகுதியை விட்டுவிட்டோம். இந்த முறை அதனையும் சேர்த்து புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை மற்ற தொகுதிகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்.
அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது. திமுக தனி பலம் கொண்ட கட்சியாக தமிழகத்தில் உள்ளது. அதிமுக 6 அணிகளாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு போட்டியே இல்லை. திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் டெபாசிட்டை இழப்பார்கள்.” என்று தெரிவித்தார்.