தலைமை மாற்றப்பட வேண்டும். அதிமுகவை அழிவுப் பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
என்னை விசுவாசமற்றவன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியதை மக்கள் அறிவர். அதனால், என் விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை.
என்னைப் பொருத்தவரை அதிமுக ஒன்றுபட வேண்டும், 2026-இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். அதிமுகவை அழிவுப் பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.