பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் அக்கட்சியை பாதுகாக்கும் எண்ணத்தை பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் அக்கட்சியை பாதுகாக்கும் எண்ணத்தை பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
தீர்ப்பை அமல்படுத்த காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவைதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் காவிரி விவகாரமானது கர்நாடகா, தமிழகம், உச்ச நீதிமன்றம் என்றே சுழல வேண்டும் என்ற பாஜகவின் சிந்தனையையே பழனிசாமியும் வெளிப்படுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் பாஜகவின் பி டீமாக மோடி அரசை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பழனிசாமி பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை 22 நாட்கள் அதிமுக எம்பிக்கள் முடக்கியதாக பழனிசாமி கூறியது முற்றிலும் உண்மையற்ற தகவல். அது மோடிக்கு ஆதரவாக அமளி செய்து நாடகம் நடத்தினர். பேரவை தீர்மானத்தின் மீது பேசிய பழனிசாமி இறுதியில் வரவேற்றார். மத்திய அரசுக்கு அழுத்தம் தரவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.