கோவை மாவட்ட அஇஅதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 2) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தை தமிழக முன்னாள் முதல்வரும், கழக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் இப்போராட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் இதில் கலந்து கொண்டார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி பேசும்போது “திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் கோவை மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் விலை ஆகியவற்றின் உயர்வால் மிகுந்த கொந்தளிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே தற்போதுள்ள திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப நாம் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என பேசியுள்ளார்.