பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் ஆணையாளர் ஸ்டாலின் தலைமையில் இது குறித்தான சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் பேருந்துகளில் இருக்க கூடிய ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரனைகளை காவல்துறையினர் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன் இருக்கும் பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி உள்ளார்களா என்பது குறித்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஹாரனை பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது பயன்படுத்தினால் 1500 ரூபாயும், நின்று கொண்டிருக்கின்ற போது பயன்படுத்தினால் 10,000 ரூபாயும் தமிழக அரசால் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.