மொத்தமாக Sick Leave எடுத்த 300 ஊழியர்கள்.. ஸ்தம்பித்த ஏர் இந்தியா நிறுவனம்.. ரத்து செய்யப்பட்ட 80 விமானங்கள்..

ஏர் இந்தியா என்ற நிறுவனத்தை, சமீபத்தில் தான் டாடா நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனம், தற்போது ஊழியர்களுக்கான புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த புதிய கொள்கையால் அதிருப்தி அடைந்த 300 ஊழியர்கள், ஒரே சமயத்தில் Sick Leave எடுத்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால், 80 சர்வதே மற்றும் உள்ளூர் விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையை சமாளிப்பதற்கு, போராட்டத்தை நடத்தி வரும் ஊழியர்களை ஏர் இந்தியா நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். அதில், “எங்களது குறிப்பிடத்தக்க ஊழியர்கள், கடைசி நேரத்தில் தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டனர். இதன்விளைவாக, விமானங்கள் தாமதம் ஆவதும், ரத்து செய்வதும் நடந்து வருகிறது.

இதன்காரணமாக, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைப்பதற்கு, எங்களது அணி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “திடீரென ஏற்பட்ட இந்த இடையூறுக்காக, நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலை, எங்களது சேவையின் தரத்தில் எந்தவிதத்திலும் பிரதிபலிக்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “விமானம் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, முழு பணமும் திருப்பி வழங்கப்படும். அல்லது, வேறொரு தேதியில் பயணிகள் பயணம் செய்வதற்கு வசதிகள் செய்துத் தரப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தின் டிக்கெட்டுக்களை இன்று புக்கிங் செய்துள்ள பயணிகள் குறித்து பேசிய அவர், “விமான நிலையத்திறகு செல்வதற்கு முன், உங்களுடைய விமான பயணம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்படுதல் குறித்து, அதன் பயணிகள், சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். “விமானங்கள் ரத்து செய்யப்படுதல் தொடர்பாக, எங்களிடம் எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை” என்றும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

ஊழியர்கள் நடத்தப்படும் விதத்தில் சமத்துவம் இல்லை என்றும், ஏர் இந்தியா நிறுவனம் தவறான முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்றும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் சங்கம், கடந்த மாதம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News