சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரை விமானங்களில் சாகச நிகழ்ச்சியான ஏர் ஷோ நடக்க இருப்பதால், இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை, தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையம் ஆகியவைகளில், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையம், இன்று பகல் 1:45 மணி முதல் மாலை 3:15 மணி வரை, ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து இன்று பகல் 1:55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல வேண்டிய யு எஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 10 நிமிடங்கள் முன்னதாக, பகல் 1:45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதையடுத்து அதன்பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், யாழ்ப்பாணம், கோவா, தூத்துக்குடி உள்ளிட்ட 14 விமானங்கள் மாலை 3.15 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் விதத்தில், நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய விமானங்களில், தூத்துக்குடி, கொல்கத்தா, ராஜமுந்திரி ஆகிய மூன்று விமானங்கள் பகல் 1:45 மணிக்கு முன்னதாகவே வந்து, சென்னையில் தரை இறங்கி விட்டன. மற்ற 10 விமானங்கள் இன்று பகல் 3.15 மணிக்கு மேல், சென்னையில் வந்து தரையிறங்குவது போல் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமான நிலைய ஆணையம் இது குறித்து அறிவிப்பு, நேற்றே வெளியிட்டு விட்டது. அதோடு விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு, நேற்று இரவில் இருந்தே குறுந்தகவல்கள் அனுப்பி, விமான நேரங்கள் மாற்றங்கள் குறித்து தெரிவித்து விட்டன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இப்போது ஒன்றரை மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டு, வானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தாலும், அதனால் பயணிகள் அவர்களின் பயணத்திற்கு ஏற்றார் போல் வருகை தருவதால் தற்சமயம் விமான நிலையம் வேறிச்சோடி காணப்படுகிறது.