சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேனாம்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், நான் என்னுடைய லாக்கரில் சேமித்து வைத்திருந்த 60 சவரன் நகைகள் திருடுப்போயுள்ளதாகவும், என்னுடைய வீட்டில் பணிபுரியம் 2 பெண் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், ஈஸ்வரி என்ற ஊழியர் தான், லாக்கரில் இருந்த நகையை சிறுக சிறுக திருடியிருப்பது தெரியவந்தது. மேலும், தான் திருடிய நகையை விற்று பணமாக மாற்றி வீட்டிற்கு எடுத்து சென்றபோது, “இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது” என்று கணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, “நான் ஐஸ்வர்யாவின் பினாமி.. இந்த பணம் நம்முடையது அல்ல.. அவர் கேட்ட பிறகு, பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த தகவல் அனைத்தும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.