உலகின் மிகவும் பயங்கரமான ஆயுதங்களில் ஒன்றாக இருப்பது ஏ.கே.47. மிகவும் எளிய முறையில் உருவாக்கப்பட்டு, அதிக சேதங்களை ஏற்படுத்தக் கூடிய இந்த துப்பாக்கி, ஒவ்வொரு ஆண்டும், உலகில் பல்வேறு உயிர்களை காவு வாங்கி வருகிறது.
இவ்வளவு பயங்கரமான ஆயுதமாக கருதப்படும் இது, சென்னையின் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை ராமாபுரம் பகுதி அருகே உள்ள மியாட் மருத்துவமனை சிக்னல் பகுதியில், ஏ.கே 47 துப்பாக்கி, கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த துப்பாக்கியில் 30 தோட்டாக்களும் இருந்துள்ளன. இந்த துப்பாக்கியை கண்டெடுத்த சிவராஜ் என்ற நபர், அதனை காவல்துறையில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், அதிரடி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது, ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு பணிக்கு, ஆவடி CRPF காவலர் சென்றுள்ளார். அப்போது, தனது துப்பாக்கியை அவர் தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு சி.ஆா்.பி.எஃப்-யிடம் ஒப்படைக்கப்படும் என்று, காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.