கட்சி மேலிட அழைப்பு விடுத்ததை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். அதன் தன் பதவியை தக்க வைப்பாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது
கட்சி மேலிட அவசர அழைப்பின்படி புதுடெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது.
சோனியா ராகுலை சந்திக்கவும் அவர் அனுமதி கேட்டுள்ளார். இந்தச் சந்திப்புகளின் போது அடுத்து ஆண்டு வரும் மக்களைவை தேர்தல் முடியும் வரை தன்னை தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்குபடி அழகிரி கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.
மேலும் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கான உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. அவற்றை நியமிக்கும்படியும் வலியுறுத்துவார்.
இந்த கோரிக்கைகள் குறித்து ராகுலிடம் மேலிட தலைவர்கள் தெரிவித்த பின் அவர் எடுக்கும் இறுதி முடிவுக்கு பின் அழகிரி தலைவராக நீடிப்பாரா அல்லது ராஜினாமா செய்வாரா என்பது தெரிய வரும். அத்துடன் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர், நான்கு மாநில தலைவர்களின் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் அறிவிப்பும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்கள் செயல் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கு யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்த தேர்வும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.