திருவாரூர் மாவட்டம் மணலி பகுதியைச் சேர்ந்தவர் பூபேஷ்.வயது 40. இவர் முத்துப்பேட்டையில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.அதே ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிபவர் திருவாரூர் மாவட்டம் மாங்குடியை சேர்ந்த சத்யராஜ் வயது 34.
இந்த நிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூபேசும் சத்யாராஜூம் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் முத்துப்பேட்டை செல்வதற்காக திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திருநெய்யேர் என்கிற இடத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் புபேஷ் மற்றும் மருத்துவ உதவியாளர் சத்யராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாக்கியிருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததுடன் டிரைவர் பூபேஷ் மற்றும் செவிலியர் சத்யராஜ் ஆகியோரே மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.