தமிழிசையை கண்டித்த அமித்ஷா?..இணையத்தில் வைரலாகும் வீடியோ

உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசையிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா சீரியஸாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜ., தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தோல்வி அடைந்தது.

தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்ததாகவும், அதிமுக.,வை விட பா.ஜ., நல்ல நிலையில் இருப்பதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘அதிமுக.,வுடன் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம். நாங்கள் ஒரு வியூகம் அமைத்திருந்தோம். கூட்டணி வைப்பதால் மோசம் போய்விட மாட்டோம். ஆனால், அண்ணாமலைக்கு எங்கள் வியூகத்தில் விருப்பம் இல்லை’ என அண்ணாமலையை விமர்சித்திருந்தார். ஒரே கட்சியை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டதால் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா தமிழிசையை அருகில் அழைத்து அவரிடம் ஏதோ சீரியஸாக பேசினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News