2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தோனி தலைமையின் கீழ், சென்னை அணி விளையாடி வருகிறது. ஆனால், சென்னை அணியின் மீது, அரசியல் தலைவர்கள் பலர், குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து வருகின்றனர்.
அதாவது, தமிழ்நாடு சார்பில் விளையாடி வரும் சி.எஸ்.கே அணியில், ஒரு தமிழர் கூட இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பா.ம.க சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு, உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கு 80 சதவீதம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தமிழக மக்களுக்கு திராவிட மாடல் வேண்டாம்.. பாட்டாளி மாடல் தான் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு தோனியை பிடிக்கும். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஒருவர் கூட தமிழர் இல்லையே” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.