ஆந்திர மாநிலம் கர்னூா மாவட்டத்தில் உள்ள தேவனகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி. இவர் தனக்கு சொந்தமான பழைய வீடு ஒன்றை, நரசிம்முலு என்ற நபருக்கு விற்பனை செய்துள்ளார். அவர் அந்த வீட்டை ஜே.சி.பி. மூலமாக இடித்து தள்ளிவிட்டு, புதிய வீட்டை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.
அதன்படி, வீட்டை இடித்து முடித்துவிட்டு, அஸ்திவாரத்திற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது, 1 டன் எடையில் உள்ள இரும்பு லாக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த லாக்கரை பார்த்த பொதுமக்கள், இதன் உள்ளே பழங்கால புதையல் இருக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால், அரசு அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர். இதற்கிடையே, வீட்டின் பழைய உரிமையாளர் கிருஷ்ணா ரெட்டிக்கும், புதிய உரிமையாளர் நரசிம்முலு-க்கும் இடையே, இரும்பு லாக்கர் யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆனால், மன்னில் இருந்து லாக்கர் கிடைக்கப்பட்டதால், அது அரசுக்கு சொந்தம் என்று அதிகாரிகள் கூறினர். இவ்வாறு சண்டை நடந்த நிலையில், இறுதியாக 3 தரப்பும் இணைந்து, அந்த இரும்பு லாக்கரை திறந்து பார்த்தனர். ஆனால், அதன் உள்ளே வெறும் பேப்பர்கள் மட்டுமே இருந்ததால், மூன்று தரப்பும் அதிர்ச்சி அடைந்தனர்.