ஆந்திர பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராமசந்திரபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ. இவருக்கு, புருஷோத்தம் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில், புருஷோத்தமுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள், இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அந்த பெண்ணிடம் பழகுவதை புருஷோத்தம் நிறுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புருஷோத்தமின் தவறான நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, நாகராஜூவை, பெண்ணின் குடும்பத்தினர் அழைத்துள்ளனர். இதுதொடர்பாக, நீண்ட நேரம் இருதரப்பும் பேசி வந்துள்ளது. பேச்சுவார்த் சுமூகமாக முடியாததால், நாகராஜூவை கார் ஒன்றில் கட்டி வைத்த அவர்கள், பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
மேலும், அந்த காரை பள்ளத்தாக்கில் இருந்து கீழே தள்ளிவிட முயற்சி செய்துள்ளனர். ஆனால், காரின் டயருக்கு அடியில் பெரிய கல் ஒன்று இருந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், படுகாயம் அடைந்த நாகராஜூ, பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.