சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில்; அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகளின் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின என்று சோனியா காந்தி பேசினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது: ராஜீவ்காந்தி, வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இடஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் கொண்டு வந்தார். இந்த சட்டத் திருத்தங்கள் சமூகத்தின் அடித்தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளை அளித்து, பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்டன. ராஜீவ்காந்தியின் இந்த சட்டம் தான், இன்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமைந்தது.
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தாலும்கூட, இந்த சட்டம் என்று அமலுக்கு வரும் என்று தெளிவே இல்லாத நிலை உள்ளது. நாளை இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்துதான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தரும் என்ற சூழல் உள்ளது.
அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகளின் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் அடிப்படையில்தான் இன்று தமிழ்நாடு, இந்தியாவே புகழும் வகையில் மகளிர் சமத்துவத்துக்கான ஒளி விளக்காகத் திகழ்கிறது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான், காவல்துறையில் பெண்களின் பங்கை அவர்கள் உறுதி செய்தார்கள். இன்று காவல்துறையில் 4-ல் ஒரு பங்கு பெண்களாக இருப்பது எவ்வளவு பெருமைப்படக்கூடியது. கருணாநிதி செய்த மற்றொரு சீர் திருத்தம் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. அதன் விளைவாக அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களாக இருந்தார்கள். இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 40 சதவீதமாக உயர்த்தி பெண்களை பெருமைப்படுத்தி இருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள், நாம் செயல்படுத்திய திட்டங்கள், நாம் பெற்றுத் தந்த உரிமைகள், கடந்த 70 ஆண்டுகளில் நாம் செய்த நல்ல முயற்சிகளை எல்லாம் சீரழிக்கும் வகையில் உள்ளது.
பெண்களை ஒரு அடையாளச் சின்னமாக மாற்றி, பழமையிலும், மரபு வழியிலும் ஏற்கெனவே பின்பற்றி வரும் பாரம்பரிய சூழ்நிலைகளில் மட்டும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறது. அவர்களுக்கான புதிய சுதந்திரத்தையும், உரிமைகளையும் அளிக்க தயாராக இல்லை.
இண்டியா கூட்டணி, இதுபோன்ற சமச்சீரற்ற தன்மைகளை நீக்கி, பெண்களுக்கு உண்மையாகவே ஒரு சமத்துவ உலகை உருவாக்கிக் கொடுக்கும் அவசர நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.