பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடம் வரை பேரணியாகச் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தலைமையில் நடைபெறும் பேரணியில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்று உள்ளனர்.
வழக்கமாக அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும், ஆனால் இன்று தூரம் குறைக்கப்பட்டு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே புறப்படுகிறது. அமைதி பேரணியை அடுத்து காவலர்கள் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.