அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த மாணவியை, ஞானசேகரன் என்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, எதிர்கட்சியினர் அனைவரும், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“இது வழக்கம்போல் அரசியலாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தை, பாஜக வன்மையாக கண்டிக்கிறது. எங்களது அரசியல் பாதையை தீர்மாணிக்க வேண்டிய தருணமாக இதனை பார்க்கின்றேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் பெண்களும், பெண் குழந்தைகளும் நிச்சயம் பாதுகாப்பாக இல்லை. அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
எனக்கு தெரிந்தவரையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, திமுகவின் நிர்வாகி தான். மேலும், உதயநிதி, அமைச்சர் மா.சு போன்ற முக்கிய திமுக நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார் அந்த நிர்வாகி.
திமுக கட்சி என்கிற போர்வை, குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த போர்வை தந்த தைரியத்தில் தான், அந்த பெண்ணிடம் ஞானசேகரன் அத்துமீறி நடந்திருக்கிறான்” என்று கூறியுள்ளார். மேலும், அமைச்சர்களுடன் ஞானசேகரன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.