Connect with us

Raj News Tamil

பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவிப்பு!

தமிழகம்

பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top