2023-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், அங்குள்ள பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பி, அதுதொடர்பான பதில்களை அந்தந்த துறையின் அமைச்சர்களின் வாயிலாக பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின்போது, கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கோபமாக சத்தம் எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அப்பாவு, “உங்களுக்கு 4 துணைக் கேள்விகளுக்கு அனுமதி கொடுத்திருக்கேன்.. மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.. இது மாதிரி சத்தம் போட்டு இங்கு பேசக்கூடாது” என்று கடுமையாக எச்சரித்தார். இதனையடுத்து, தனக்கு பேச வாய்ப்பு வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கேட்டார்.
இதையடுத்து, அவருக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அப்பாவு ஆசிரியராக இருந்தவர் என தெரியும். அவர் சில நேரங்களில் கனிவானவராகவும், சில நேரங்களில் கண்டிப்பானவராகவும் இருப்பதாக தெரிவித்தார்.இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, அப்ப நீங்க துணை கேள்வி கேட்க வரலையா..? என நகைச்சுவையாக கூறி சிரித்தார்.