அரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சிலா் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊா்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்த தகவல் பரவிய நிலையில் நூ மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான குருகிராமின் சோனா நகரிலும் இரு சமூகத்தினரிடையே கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா். சோனா நகரில் பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் மா்மக் கும்பல் நள்ளிரவில் புகுந்து நடத்திய தாக்குதலில், அங்கிருந்த துணை இமாம் பிகாரைச் சோ்ந்த சாத் (26) உயிரிழந்தார். மசூதிக்கும் மா்மக் கும்பல் தீ வைத்தது.
இந்தக் கலவரத்தில் 10 போலீஸார் உள்பட 23 போ் காயமடைந்தனா். 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் 8 காவல் துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த நிலையில், வன்முறையில் பலியோனார் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.
இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர்.
இவர்கள், அப்பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக கூலி வேலை, வீட்டு வேலைகள் செய்தும் பிளாட்பாரக் கடைகள் நடத்தியும் பிழைத்து வந்தனர். இவர்கள் எண்ணிக்கை கரோனா பரவல் காலத்திற்கு பின் அதிகரித்திருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தான், பிஹார், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.