ஆண்டிப்பட்டி அருகே மான்கறி சமைத்தவர் கைது..! மற்றொருவர் தப்பி ஓட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச சேர்ந்த முருகன் என்பவர் புள்ளிமான் கறி வைத்திருப்பதாக மேகமலை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் கோம்பைத்தொழுவிற்கு சென்று முருகனின் வீட்டில் இருந்த குக்கரை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குக்கருக்குள் வேக வைக்கப்பட்ட நிலையில் புள்ளி மான் கறி இருந்தது வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் முருகனை கைது செய்து மேகமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த அழகுராஜா என்பவரின் தோட்டத்தில் செந்நாய்கள் கடித்து புள்ளி மான் இறந்து கிடந்ததாகவும். அந்த மானின் இறைச்சியை எடுத்து அழகுராஜா தன்னிடம் கொடுத்ததாகவும் முருகன் விசாரணையில் தெரிவித்தார்.

இதையடுத்து அழகுராஜாவை கைது செய்வதற்காக வனத்துறையினர் கோம்பைத்தொழு கிராமத்திற்கு சென்றனர். ஆனால் வனத்துறையினர் வருவதை அறிந்த அழகுராஜா தலைமறைவானார். அதைத்தொடர்ந்து புள்ளி மான் கறி சமைத்த குற்றத்திற்காக முருகன் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அழகுராஜாவை தேடி வருகின்றனர்.