செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் உலகளாவிய கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்த அபாயத்தை எடுத்துரைத்தார்.
அப்போது “பயங்கரவாதிகளின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சென்று சேரும் பட்சத்தில் உலக அளவில் அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பு தேவை. ஏ.ஐ தொழில் நுட்பத்தை 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக மாற்ற முடியும். அதே சமயம் 21-ம் நூற்றாண்டை அழிப்பதிலும் ஏ.ஐ தொழில்நுட்பம் ஒரு சக்தியாகவும் இருக்கும். டீப் ஃபேக், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டு போன்ற சவால்களைத் தவிர, ஏ.ஐ தொழில்நுட்பம் பயங்கரவாதிகளின் கைகளில் சென்று கிடைத்து விடக்கூடாது.
ஏ.ஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளைச் சென்றடைந்தால் உலகளாவிய பாதுகாப்பு ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினையை சரி செய்யவும், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை நிறுத்தவும் உலக அளவில் ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பல்வேறு சர்வதேச சிக்கல்களுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை நாம் வைத்திருப்பது போல், ஏ.ஐ பயன்பாட்டிற்கான உலகளாவிய நெறிமுறை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இதில் அதிக ஆபத்துள்ள ஏ.ஐ கருவிகளைச் சோதனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு நெறிமுறை உருவாக்க வேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பம் இந்தியாவின் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்திய அரசு விரைவில் ஏ.ஐ வழியான தொழில்நுட்ப பணியைத் தொடங்கும். சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மாற்றும் ஆற்றலை கொண்டு இருந்தாலும் அதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்” என்றார்.