Connect with us

Raj News Tamil

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

அரசியல்

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்படி இரண்டு அமைச்சர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழக்கின் விசாரணைக்காக தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், கெஜ்ரிவால் எதற்கும் பிடி கொடுக்காமல் பறந்து வந்தார். மறுபுறம் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கிக்கொண்டே வந்தது.

இறுதியாக நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த ரெய்டில், கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த இரண்டு மாதங்களில் அமலாக்கத்துறை இரண்டு முதலமைச்சர்களை கைது செய்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபணமாகி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் மட்டுமே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, இப்போது கெஜ்ரிவால் முதலமைச்சராகவே தொடர்கிறார். இருப்பினும் சிறையிலிருந்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.

இதற்கிடையில் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவி ஸ்வாதி மாலிவால், டெல்லி நிதியமைச்சர் அதிஷி மர்லினா, கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top