ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்காக, இடைக்கால ஜாமீன் பெற்ற அவர், கடந்த ஜூன் 2-ஆம் தேதி அன்று, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திகார் சிறை நிர்வாகம், அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி முதல்வரின் உடல்நலம் சீராக உள்ளது என்று கூறியிருந்தது.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் சிங், பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் அணி, அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலத்தை பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில், அரவிந்த் கெஜ்ரிவால், மிகவும் விரைவாக தனது உடல் எடையை இழந்துக் கொண்டிருக்கிறார் என்றும், ரத்த சர்க்கரை குறையும் நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் கண்டுபிடித்தனர். 50mg/dL என்ற அளவில், அவரது சர்க்கரை அளவு, 5 முறை குறைந்திருக்கிறது. இது, அவரை கோமாவில் இழுத்து சென்றிருக்கலாம் அல்லது இதன் விளைவாக அவர் உயிரிழந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “கைது செய்யப்பட்டபோது அவரது எடை 70 கிலோவாக இருந்தது. அது தற்போது 61.5 கிலோவாக குறைந்திருக்கிறது. கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.