Connect with us

Raj News Tamil

ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரி; ஆன்மிகத்திற்கு அல்ல: மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரி; ஆன்மிகத்திற்கு அல்ல: மு.க.ஸ்டாலின்!

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். இப்போது ‘சீவிடுவேன் சீவிடுவேன்’ என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல. சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்தும் விடும். எதிர்மறை பிரச்சாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட, நேர்மறை பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியானது.

இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்துவிட்டது. திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலையில்லை எனக் கூறியவர்கள், இறுதியில் இங்குதான் வந்து அடைக்கலம் அடைந்தார்கள்.
நாம் இன்று பாஜக, அதிமுக போன்றவர்களுடன் மோதிக் கொண்டிருக்கிறோம். சாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்ககூடிய ஒரு கூட்டத்துக்கு எதிராக மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் சாதித்தன்மை தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல. நமது இந்தியாவுக்கே எதிரானது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரானது.

இப்படிப்பட்ட பாசிச வாசிகள் ஒருபக்கம். இவர்களின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக மறுபக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கூட்டம்தான் அதிமுக. பாஜகவுடன் இருந்தால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி, அதை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசியல்வாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக. இப்படிப்பட்ட சோஷியல் வைரஸைதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம்.

என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை.

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் கருத்துக்கள் சில நொடியில் மக்களிடம் சேர்ந்து விடுகிறது. நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாக பதில் தரவேண்டும்’’ என தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top