ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. இந்த படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதனை வைத்து, டிராகன் என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில், அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, தனது அடுத்தடுத்த படங்களுக்கு உதவி இயக்குநர் தேவை என்றும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், சினிமா ஆர்வம் உள்ள பல்வேறு தரப்பினர், விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து, தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உதவி இயக்குநர் பணிக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், அத்தனை பேரின் Resume களையும் சரி பார்ப்பதற்கு நேரம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், முதலில் 10 பேரை மட்டுமே பணிக்கு எடுக்கலாம் என இருந்ததாகவும், தற்போது 20 பேரை பணிக்கு எடுக்கலாம் என்று முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 15 ஆயிரம் பேர், உதவி இயக்குநர்களாக மாற விரும்புவது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.