வக்பு வாரிய சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த திருத்தங்கள் அமலுக்கு வந்தால், வக்பு வாரியத்தின் அதிகாரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். 32-ல் இருந்து 40 திருத்தங்களை கொண்டு வர ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், AMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “வக்பு வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து செல்வதற்கு, மோடியின் அரசாங்கம் ஆசைப்படுகிறது. மேலும், அதன் உள்ளே தலையிடுவதற்கு அது ஆசைப்படுகிறது” என்று கூறினார்.
இவரது இந்த பேச்சுக்கு பதில் அளித்த வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அசாதுதீன் ஓவைசி ஒரு உயர்நிலை வழக்கறிஞர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்தில், வக்பு என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பதை, அவர் நிச்சயம் நமக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “வக்பு என்ற வார்த்தை, அரசியமைப்பு சட்டத்தில், எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், இந்த வக்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இது சமத்துவத்திற்கு எதிரானது மற்றும் இதனை நியாயப்படுத்துவது, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
“அனைத்து மதங்களுக்குமான நிலம் தொடர்பான பிரச்சனை, மாவட்ட நீதிமன்றங்களில் தான் தீர்த்துவைக்கப்படுகிறது. ஆனால், வக்பு வாரியம் சம்பந்தமான வழக்குகள், நீதிமன்றத்திற்கு வெளியே எப்படி முடிவு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
“வக்பு வாரியத்திற்கு 10 லட்சம் ஏக்கரில் நிலம் உள்ளது. இது உலகத்தில் உள்ள 50 நாடுகளின் பரப்பளவை விட அதிகமான நிலமாகும். இது சட்டத்திற்கு விரோதமானது. ஜவஹர்லால் நேரு தான் வக்பு வாரியத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தான், அதனை வலிமையாக்கினார்கள்” என்று கூறினார்.
“வக்பு வாரியத்தில் திருத்தம் மேற்கொள்ள உள்ள அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். இது ஒரு தண்ணிச்சையான முடிவு” என்று அவர் கூறினார்.