அப்பாவி மக்கள் பலியாவதைப் பார்க்கும்போது மனக்கசப்பே ஏற்படுகிறது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது. அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து சர்வதேச ஊடகத்துக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்துவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. அப்பாவி மக்கள் பலியாவதைப் பார்க்கும்போது மனக்கசப்பே ஏற்படுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் குண்டுவீச்சால் கொல்லப்படுகிறார்கள். நாம் ஜனநாயக அரசு என்பதால் நமக்கு கொள்கைகள் முதன்மையானவை. எல்லா உயிர்களும் முக்கியம் எனக் கருதுவதே இஸ்ரேலுக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் எதிர்கால நோக்கில் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.