உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் விராட் கோலி களமிறங்கினார். கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
அதன்பின் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன்களை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா (9 ரன்கள்), முகமது ஷமி ( 6 ரன்கள் ), ஜஸ்பிரித் பும்ரா ( 1 ரன்) ஆட்டமிழந்து வெளியேறினர். நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்டாரக் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் மற்றும் ஹேஸசில்வுட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் வார்னர் 7, மார்ஷ் 15, மற்றும் ஸ்மித் 4, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஹெட் மற்றும் லபுஷேனும் பதற்றம் அடையாமல் விளையாடி ரன் குவித்தனர்.
அதிரடியாக ஆடிய ஹெட் 137 எடுத்து ஆட்டமிழந்தார்.
மார்னஸ் லபுஷேன் 58, மேக்ஸ்வெல் 2, ரன்கள் எடுத்து களத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து 6 முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.