நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது.
இதையடுத்து அந்நாட்டு வீரரான மிட்செல் மார்ஷ் அந்தக் கோப்பையின் மீது கால் வைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி உள்ளிட்டோரும் மிட்செல் மார்ஷுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான பண்டிட் கேசவ், காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் “பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய உலகக்கோப்பையை அவமதிக்கும் வகையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் அதன் மீது கால் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் 1.40 கோடி இந்தியர்களின் மனதை புண்படுத்துவதாக இருந்தது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்து, இந்தியாவில் அவர் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் மீது இந்திய போலீஸார் வழக்கு பதிவு செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.