பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிச.6) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று காலை முதலே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு இதே நாளில் உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க நேற்று நள்ளிரவில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக போலீசார் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி தீவிர பரிசோதனை செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீசாருடன் சேர்ந்து வெடிகுண்டு நிபுணர்களும் வெடிக்ககூடிய பொருட்கள் ஏதேனும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கருவிகளை வைத்து சோதனை செய்தனர்.