ஆட்டோ டிக்கியில் இருந்து வந்த பச்சிளங் குழந்தையின் சத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த ஆட்டோ டிரைவர்!

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் காதர். ஆட்டோ டிரைவராக பணியாற்றி வரும் இவர், பயணிகளின் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, கையில் கட்டப்பையுடன் வந்த பெண் ஒருவர், கோயம்பேடு செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிய காதர், கோயம்பேட்டில் இறக்கிவிட்டார். இதையடுத்து, அங்கிருந்து கிளம்பி செல்லும்போது, ஆட்டோவில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதர், வண்டியின் பின்பக்கம் ஆய்வு செய்துள்ளார்.

அதில், அந்த பெண்ணின் கட்டப்பையில், பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தை கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு, தனியார் மருத்துவமனையில், முதலுதவிக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து, அந்த பச்சிளம் குழந்தை, பால மந்த்ரா என்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையை ஆட்டோவில் தவிக்கவிட்டு சென்ற பெண்ணை, தீவிரமாக தேடி வருகின்றனர்.