ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி, பல்வேறு இளைஞர்கள் தங்களது பணத்தை இழந்து, நடுதெருவுக்கு வந்தனர். ஒருசிலர் அதிகப்படியான பணத்தை இழந்து, மனஉளைச்சலில், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவமும், நடந்தது. எனவே, இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இயற்றி, கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, ஆளுநர் அதனை திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு கூடிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை, இந்த மசோதாவிற்கு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் தனி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.