பீப்பிரியாணி இல்லாமல் உணவு திருவிழா இல்லை…! தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் அதிரடி உத்தரவு…!

உணவுத் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த மே மாதம் பிரியாணி திருவிழா நடைபெறும் என திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி மட்டும் தவிர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் விரும்பி உண்ணும் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிப்பது தீண்டாமை என்று முற்போக்கு அமைப்புகள் குற்றம்சாட்டின.

மாட்டிறைச்சி பிரியாணியையும் உணவுத் திருவிழாவில் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

திமுக கூட்டணியில் உள்ள விடுமுறை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்தார். கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து ஆம்பூர் பிரியாணி திருவிழா ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

கனமழை காரணமாகவே ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இது தொடர்பாக விசிக தொழிலாளர் அமைப்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அளித்திருந்தது. இதனை பரிசீலனை செய்த ஆணையம், 20 வகையான பிரியாணிக்கள் இடம்பெறும் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிப்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான பாகுபாடு என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு இருந்தது.

இதற்கு பதிலளித்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, பன்றி இறைச்சி குறித்து குறிப்பிட்டதுடன், சாதி பாகுபாடு காட்டவில்லை என்று விளக்கமளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்ககக்கூடாது என்றும், அது பாடுபாட்டை ஏற்படுத்தும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.